டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடாவிட்டாலும் கூட கவுதம் கம்பீருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை. தன்னைக் காணவந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் இலவசமாக டிக்கெட்டுக்கள் பெற்றுக் கொடுத்து போட்டிகளைக் காண ஏற்பாடு செய்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி பெரோஷாகோட்லா மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நடந்தது.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்த கம்பீர், இந்தப் போட்டியில் விளையாடவில்லை. ஆனால், கம்பீரின் போட்டியை காண்பதற்குக் கம்பீர் ஆதரவு அளித்து வரும் சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகள் வந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் வாழ்நாள் கல்விச்செலவையும் கம்பீர், தனது கம்பீர் அறக்கட்டளை வாயிலாக அளித்து வருகிறார்.
அந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள், குடும்பத்தினர் என 21 பேர் டெல்லியில் நடக்கும் கம்பீரின் போட்டியைக் காண நேற்றுமுன்தினம் இரவு வந்தனர். அவர்கள் வந்திருப்பது தெரிந்ததும், தான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வரவழைத்த கம்பீர் அவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது அவர்கள் கம்பீருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ராணுவ வீரர்களின் குழந்தைகளும், குடும்பத்தினரும் போட்டியை காண்பதற்கு இலவசமாக டிக்கெட்டுகளையும் போட்டி நிர்வாகத்திடம் இருந்து கம்பீர் பெற்றுக்கொடுத்தார். அதன்பின், அவர்கள் அனைவரும் கம்பீரின் 23 எண் ஜெர்சி அணிந்து போட்டியை காண முடிவு செய்தனர்.
ஆனால், போட்டி தொடங்கும்போதுதான், கம்பீர் போட்டியில் இல்லை என்பது அந்த 21பேருக்கு தெரிந்தது. ஆனாலும் மனம் வருந்தாத அந்தக் குழந்தைகளும், ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கம்பீரின் 23எம் ஜெர்சியை அணிந்து அவருக்கு ஆதரவாக குரல்எழுப்பினார்கள்.
ஒருபுறம் டெல்லி அணிக்காக ரசிகர்கள் கரகோஷம் எழுப்பிக்கொண்டிருக்க இந்த 21 பேரும் கம்பீருக்காக கோஷமிட்டு, ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:
நக்சலைட்டுகள் தாக்குதலில் இந்தக் குழந்தைகள் தங்களுடைய தந்தையை இழந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் பாருங்கள் இந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தை இழந்துவிட்ட சோகத்தில்தான் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள், முகத்தில் இன்னும் முழுமையான மகிழ்ச்சி வரவில்லை. ஆனால், என் மீது உள்ள அன்பால் இங்கு போட்டியைக் காணவந்தார்கள். ஆனால் இவர்களுக்காக நான் செய்ய முடியும், அதனால், போட்டியைக் காண இலவசமாக டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தேன். இவர்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் அளித்த டெல்லி அணியின் சிஇஓ ஹேமந்த் துவாவுக்கு எனது நன்றிகள்.
ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இரவு இந்தக் குழந்தைகளுடனும், வீரர்களின் குடும்பத்தினருடனும் செலவிட்டேன். சிரிப்பு, அழுகை, மனக்கவலை, மகிழ்ச்சி அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். நான் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன் என்றுகூடக் கேட்டார்கள். நான் விளக்கம் கூறியபோதிலும் அதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
சுக்லா நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு பின் பலவிஐபிக்கள் பல்வேறுவிதமான உதவிகளைச் செய்து தருவதாக அந்த வீரர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால், காலத்தின் ஓட்டத்தில் அனைவரும் மறந்துவிட்டனர். என்னால் முடிந்த அளவு அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் செய்து வருகிறேன்
இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.