தொடர்ந்து 3 ஆட்டங்களில் வென்றது மகிழ்ச்சி: ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்ஸன் பேட்டி
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறினார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து திரில் வெற்றியைப் பெற்றது.
முன்னதாக கொல்கத்தா பேட்டிங்கின்போது ராபின் உத்தப்பா 3, கிறிஸ் லின் 49, ராணா 18, சுனில் நரேன் 9, தினேஷ் கார்த்திக் 29, ஆந்த்ரே ரஸல் 9 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3, ஸ்டான்லேக், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2, கவுல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஹைதராபாத் அணி பேட்டிங்கின்போது விருத்திமான் சஹா 24, ஷிகர் தவண் 7, கேன் வில்லியம்ஸன் 50, மணீஷ் பாண்டே 4, ஷகிப் அல் ஹசன் 27 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 5, யூசுப் பதான் 17 ரன்கள் ஆட்டமிழக்காமல் சேர்த்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 2, பியூஷ் சாவ்லா, மிட்செல் ஜான்சன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
வெற்றிக்குப் பின்னர் கேன் வில்லியம்ஸன் பேசும்போது, “தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் அணியின் பவுலிங்கும், பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. கடைசி நேரத்தில் யூசுப் பதான் அருமையாக விளையாடினார். கொல்கத்தா போன்ற வலுவான அணியை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.