ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுத்தது தவறு; ஹர்பஜன் சிங் சொல்கிறார்
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும், அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் வியாழன் அன்று தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில், குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். இணையத்தளம் ஒன்றில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
முதல் டெஸ்டில் ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளருடன் விளையாடி இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஹார்திக் பாண்டியாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவைத் தேர்வு செய்திருக்கலாம். சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான நிலை இருந்ததால். எனவே இந்திய அணி ஆடுகளத்தின் தன்மை, வானிலை சூழல்களைச் சரியாகக் கணிக்கவில்லை. நான்கு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் எனத் தேர்வு செய்தது அவர்களுக்கு உதவவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினாலும் பாண்டியா அணி எதிர்பார்த்தபடி பந்துவீசவில்லை. இந்நிலையில் அவரை வைத்து ஏன் விளையாடுகிறீர்கள். குல்தீப்பால் இரு வழிகளிலும் பந்தைச் சுழவைக்கமுடியும். எனவே இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அவர் உதவுவார் என்று கூறியுள்ளார்.