வாயை திறந்து பேசுங்கள் ரவி சாஸ்திரி; ஹர்பஜன் சிங் காட்டம் !!

வாயை திறந்து பேசுங்கள் ரவி சாஸ்திரி; ஹர்பஜன் சிங் காட்டம்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் தோல்வி மீதான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை, விராட் கோலி மீதான விமர்சனங்கள் ஒரளவுக்குக் குறைந்த பிறகு தற்போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் அனைவருமே மிகவும் எச்சரிக்கையாக பிசிசிஐ-யின் பங்கு என்ன என்பதில் அசாத்திய மவுனம் காப்பதே நம் கவனத்தை ஈர்க்கிறது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங், ரவிசாஸ்திரி மீது காட்டமான விமர்சனத்தைத் தொடுத்துள்ளார்.

அதாவது இங்கிலாந்தின் வானிலை, பிட்ச் பற்றியெல்லாம் கவலையில்லை என்று ரவிசாஸ்திரி அலட்சியமாகப் பேசியதைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஆஜ்தக் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:

பயிற்சியாளர் தன் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். இன்றோ, நாளையோ அவர் பேசித்தான் ஆக வேண்டும். அவர்தான் அனைவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். இந்தியா தொடரை வென்றால் அவர் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும். இங்கிலாந்தின் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் வித்தியாசமானதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

நாம் எதிர்த்துப் போராட எந்த ஒரு துணிவும் காட்டவில்லை. வெற்றி பெறுவதற்கான விருப்புறுதி அங்கு இருக்கவில்லை. அதுதான் நம் இதயத்தை நொறுக்குகிறது. எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் சரணடைந்தோம், இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

அயல்நாடுகளில் தொடக்க வீரர்களின் நல்ல கூட்டணிதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவன் மாற்றப்படுகிறது. நடுவரிசை வீர்ர்களும் நிலைபெறவில்லை.

லார்ட்ஸில் பசுந்தரை ஆடுகளம், மேகமூட்டமான வானிலை ஆனால் 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்தனர். இது தேவையா? உமேஷ் ஆடியிருந்தால் இங்கிலாந்து 160-170 ரன்களில் ஆட்டமிழந்திருக்கும்.

இவ்வாறு கடும் விமர்சனங்களை முன்வைத்தார் ஹர்பஜன் சிங்.

 

Mohamed:

This website uses cookies.