தற்போது இந்திய அணியில் இடம் பிடிக்காத சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ரஞ்சி ட்ராபியில் பஞ்சாப் vs பெங்கால் போட்டியில், பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இதனால், மீண்டும் கிரிக்கெட் விளையாடும் சந்தோசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.
அவர் கடைசியாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். அவர் கடைசியாக பஞ்சாப் அணிக்காக 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிக்கெட் விளையாடினார், இதனால் மீண்டும் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது சந்தோஷம் அளிக்கிறது என கூறினார் ஹர்பஜன். இப்போது இருக்கும் ஹர்பஜன் சிங், பழைய பார்மில் இருந்த ஹர்பஜன் சிங் இல்லை, ஆனால் 2017 ஐபில் சீசனில் அவரால் உதவி செய்ய முடியும் என நிரூபித்தார்.
ஹர்பஜன் சிங் கடைசியாக 2016 டி20 ஆசிய கோப்பை தொடரில் யூனிடேட் அரபிக் எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ப்ளூ நிற உடையை அணிந்து விளையாடினார். இந்திய அணிக்கு கடைசியாக 2015இல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த தொடரில் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, இதனால் அவரை அணியில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
அவரது காலத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளேவுடன் ஜோடி சேர்ந்து எதிரணியின் நட்சத்திர வீரர்களை துவம்சம் செய்தார்கள். சில முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும், எதிரணியை புரட்டி போட இவரே போதும். 2001இல் ஆஸ்திரேலிய தொடரில் இவரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் டெஸ்ட் போட்டி மும்பையில் இந்திய அணி தோற்ற பிறகு, கொல்கத்தா மற்றும் சென்னை டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி தொடரை வெல்ல உதவி செய்தார் ஹர்பஜன் சிங்.
டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தான். கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்னே ஆகியோரை தொடர்ந்து மூன்று பந்துகளில் பெவிலியன் திருப்பினார் ஹர்பஜன். முதல் இன்னிங்சில் மொக்கையாக விளையாடிய இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுத்தது ஆஸ்திரேலிய அணி, ஆனால் வி.வி.எஸ் லட்சுமண் 281 ரன் அடிக்க, போட்டி தலை கீழாக மாறியது. பாலோ-ஆன் செய்து பேட்டிங் விளையாடிய இந்திய அணி, அந்த டெஸ்ட் போட்டியையே வென்றது.