இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய வீரர்கள் இல்லாமல், சமகாலத்தின் டாப் 5 பெஸ்ட் வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டுவரப்பட்ட பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சர்க்கில் நடைபெற்றிருக்கிறது. இரண்டிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது.
இரண்டு சீசனிலும் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றது. முதலாவது முறை நியூசிலாந்து அணியிடமும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியா அணியிடமும் பைனலில் தோல்வியை தழுவி, துரதிஷ்டவசமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.
இம்முறை பைனலில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு இந்திய அணி கடுமையாக விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பும் விமர்சனங்களை பெற்று வந்தது. அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இப்படியொரு குளறுபடி இந்திய அணிக்குள் நடக்கும் சூழலில், முன்னணி இந்திய வீரர்கள் அஸ்வின், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லாமல் சிறந்த ஐந்து டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.
இவர் தேர்வு செய்த ஐந்து வீரர்களில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு இங்கிலாந்து வீரர் இருக்கின்றனர்.
டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டராக டாப்பில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இவரது தேர்வில் இல்லாதது தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் ஏற்கனவே அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஹர்பஜன் சிங் அங்கீகரிக்காமல் பொறாமையில் இருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதை உறுதியாக்கும் வகையிலேயே ஹர்பஜன் சிங் இப்போது செயல்பட்டு இருக்கிறார். இதற்கு முன் சில பேட்டிகளில் அஸ்வின் பற்றி கேட்டபோது அலட்சியமாக ஹர்பஜன்சிங் பதில் கூறிய வரலாறும் இருக்கிறது.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஐந்து பெஸ்ட் டெஸ்ட் வீரர்கள் பட்டியல்:
1. நேதன் லையோன்
2. ஸ்டீவ் ஸ்மித்
3. ரிஷப் பண்ட்
4. பென் ஸ்டோக்ஸ்
5. ரவீந்திர ஜடேஜா