“வணக்கம் டா மாப்ளே”… தமிழில் கெத்து ட்வீட் போட்ட ஹர்பஜன் சிங்
ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுவதையடுத்து ஐபிஎல் அணிகள் சில வீரர்களை விடுவித்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர்களும் அணி மாறவுள்ளனர். இதற்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் யார் எந்த அணிக்குச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதில், ஐபிஎல்-ல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அணியிலிருந்து சாம் பில்லிங்ஸ், சைதன்ய பிஷ்னாய், துருவ் ஷோரி, டேவிட் வில்லே, மோஹித் சர்மா ஆகிய வீரர்களை விடுவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் சென்னை அணியிலேயே ஹர்பஜன் சிங் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியை ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், “வணக்கம் டா மாப்ள! #CSK டீம் ல இருந்து… இந்த ரிட்டென்ஷன் என்னாலயா இல்ல உங்களாலயா.
தமிழ் எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவுல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு”எல்டோரா”. என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு.இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கே ஜெயித்து வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் “வணக்கம் டா மாப்ள.. CSK டீம்ல இருந்து…” என்பது டிக் டாக் செயலி வீடியோவில் மிகவும் பிரபலம். எப்படியென்றால் தேனியைச் சேர்ந்த ஒருவர் தனது டிக் டாக் வீடியோ தொடங்கும் போதெல்லாம் “வணக்கம் டா மாப்ள.. தேனியிலிருந்து” என்று தான் தொடங்குவார். இந்த வசனமே தற்போது இணையத்தின் ட்ரெண்ட்டிங் வசனமாக மாறியுள்ளது. அதை வைத்து ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.