இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை மகேந்திர சிங் தோனி கைப்பற்றுவார் என்று டயலாக்குடன் தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த வருட ஐபிஎல் சீசனில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் போட்டியை குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய பிறகு, இரண்டாவது லீக் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு, டெவான் கான்வெ, ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் பேட்டிங்கில் அபாரமாக விளையாடினர். 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் குவித்தது சிஎஸ்கே அணி.
கடினமான இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. இன்னிங்ஸ் கடைசி ஓவர் வரை போராடிய லக்னோ அணி, இறுதியாக 205 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய சீசனின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றியை தழுவியது.
நான்கு வருடங்களுக்குப் பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் இத்தகைய வெற்றிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கு 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை விளையாடிய ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியைவிட தோனியை புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். ஹர்பஜன் சிங் சிஎஸ்கே விளையாடியபோது, தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
2020 ஐபிஎஸ் சீசனில் கொல்கத்தா அணிக்கு எடுக்கப்பட்டார். அதன் பிறகு தமிழில் ட்விட் போடுவதை நிறுத்திவிட்டார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுடன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்போது கமெண்ட்ரி செய்து வருகிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் தமிழில் அசத்தலாக ட்வீட் செய்திருக்கிறார். ஹர்பஜன் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
“சார் ரிலீஸ் ஆகியிருக்குற #பத்துதல பாயும், #விடுதலை வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல #MSDhoni இந்த முறை @IPL கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. #CSK கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.@ChennaiIPL #CSKvLSG #Chepaukstadium“