ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்கள் இப்படித்தான் இருக்குமென தனது கணிப்பினை தெரிவித்திருக்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா.
மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், சுமார் ஐந்து மாத காலங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிச் சென்று இறுதியாக செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய காலங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால், இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது.
இதற்காக ஏற்கனவே வீரர்கள் பலர் துபாய், அபுதாபி சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் வரும் துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் நடைபெற்றால் மைதானங்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்ற கணிப்பு வீரர்களுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெளி நாட்டில் நடைபெறுவதால் மைதானத்தின் நிலை எப்படியிருக்கும் என ஒரு யூகத்திலேயே வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மைதானங்களில் நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா. அவர் கூறுகையில், “பொதுவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் மைதானங்களை இப்படி இருக்கும் என கணித்து விடலாம். ஆனால் தற்போது துபாய், அபுதாபி போன்ற மைதானங்களை எப்படி இருக்கும் என கணிக்க இயலாது.
சில நேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துவிடும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக சூழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். கணிப்பு சற்று கடினமாக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடிவிட்டால் கணிப்பது சற்று எளிதாக இருக்கும். அதன் பிறகு மைதானத்தின் போக்கை அறிந்து விளையாடலாம்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்களும் மிகவும் திறமையானவர்கள் என்பதால் யாரையும் குறைத்து மதிப்பிட இயலாது. ஆதலால் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும். இந்த வருடம் டெல்லி அணியில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அளவிற்கு வீரர்கள் இருப்பதால் கோப்பையை வெல்லும் என்று உறுதியாகக் கூறுவேன்.” என்றார்.