ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தின் நிலை என்ன தெரியுமா..?
பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் கொடுக்க களமிறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃப்கர் ஜமானை புவனேஷ்வர் குமார் அடுத்தடுத்து வெளியேற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதில் போட்டியின் 18-வது ஓவரை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரின் ஐந்தாவது பந்தை வீசிய போது பாண்டியாவில் முதுகுப் பகுதியில் வலி (lower back injury) ஏற்பட அப்படியோ மைதானத்தில் சுருண்டார்.
அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் எழுந்து நடந்துள்ளார். அவரது காயம் குறித்து மெடிக்கல் குழு மதிப்பிட்டு வருவதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் தேவை என மருத்துவ குழு அறிவுறுத்தும் பட்சத்தில், ஹர்திக் பாண்டியா எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகும் நிலை ஏற்படும்.
இந்திய அணி எளிய இலக்கு;
இன்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான சர்பராஸ் அஹமது, ஃபகர் ஜமான் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், பாபர் அசாம் (47) மற்றும் சோயிப் மாலிக் (43) ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 43.1 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.