நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு பிசிசிஐ பதிலளித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையே வைக்காமல் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் பொழுது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் செய்யும் பொழுது தோள்பட்டையில் பந்து அடித்து காயம் ஏற்பட்டது இதனால் இவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிட்டது.
இந்நிலையில் மருத்துவ குழுவால் ஹார்த்திக் பாண்டியா சோதிக்கப்பட்டார் மேலும் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக இவர் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவார் என்று பிசிசிஐயால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியில் தேவையில்லாத தேர்வாக ஹர்திக் பாண்டியா பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீண்டும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, இருந்தபோதும் அதிரடி வீரரான ஹார்த்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது பழைய பார்மை காட்டுவார் என்றும் சில கிரிக்கெட் ரசிகர்கள் அவர்மீது ஆதரவு வைத்திருக்கின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.