ஹர்திக் பாண்டியாவுக்கு அது மட்டும் வந்துட்டா போதும், அவர்தான் டாப் – முன்னாள் வீரர் கருத்து!

ஹர்திக் பாண்டியா ஆட்டத்தில் சற்று முதிர்ச்சி தேவை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டிம் பிரஸ்னன் தெரிவித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததால் இந்திய அணிகள் இடம்பெற முடியாமல் போனது. அதன் பிறகு இடம்பெற்ற சில தொடர்களும் பாதியிலேயே காயத்தினால் வெளியேறினார். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு மோசமாக அமைந்தது. பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீசவில்லை.

ஆல்ரவுண்டராக செயல்பட முடியாததால், மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தக்கவைக்கவில்லை. பிறகு காலத்திலிருந்து மீண்டுவந்து தனது உடல் தகுதியையும் மேம்படுத்திக் கொண்ட ஹர்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், புதிதாக வந்த குஜராத் அணிக்கு மாறினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். எப்படி கேப்டன் பொறுப்பில் செயல்படுவார் என்று எதிர்த்தபோது, சிறப்பாக வழி நடத்தி கலந்து கொண்ட முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை பெற்றுத் தந்தார்.

சிறப்பான ஐபிஎல் தொடருக்கு பிறகு, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து, ஐபிஎல்-க்கு பின் நடந்த அனைத்து தொடர்களிலும் பங்கேற்றார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார். டி20 உலக கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணியிலும் எடுக்கப்பட்டிருக்கிறார். மிக முக்கியமான ஆல்ரவுண்டராக கருதப்படும் இவர் மீது இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

“எந்த ஒரு அணிக்கும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது மிகவும் முக்கியமான இடம். உடல்தகுதி மிக அதிகமாக தேவைப்படுவதும் இந்த வீரருக்குத்தான். வேகப்பந்து ஆல்ரவுண்டரை பொறுத்தே சமநிலையான அணியா என்று பார்க்கப்படும். தற்போது இருக்கும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரராக உருவெடுத்திருக்கிறார். அவரது ஆட்டத்தில் சற்று முதிர்ச்சி இருந்தால், இன்னும் பல உச்சங்களை தொடுவார். நிச்சயம் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராகவும் வளம் வருவார்.

சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கை புரிந்து கொள்ளாமல் பேட்டிங்கில் சொதப்புகிறார். அதனை மட்டும் சரி செய்துகொள்ள வேண்டும். அவரது உடல்தகுதி தற்போது சிறப்பாக இருக்கிறது. ஃபீல்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார்.

இந்த வருடம் எந்த அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்ற கேள்விக்கு பதில் அளித்த டிம் பிரஸ்னன், “இந்திய அணியை நாம் எந்தவொரு தருணத்திலும் ஒதுக்கிவிட முடியாது. மிகவும் கவனிக்க கூடிய ஒரு அணி. அதே நேரம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தேர்வு செய்யப்பட்ட விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது. சமநிலை பெற்ற அணியாகவும் இருக்கிறது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.