ஹர்திக் பாண்டியா கூலான கேப்டனாக இருக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
இலங்கை அணியுடன் புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் பொறுப்பில் முதல் தோல்வியை சந்தித்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
இரண்டாவது டி20 போட்டியில் துவக்க ஓவர்களில் இந்திய அணி ரன்களை வாரிக்கொடுத்தாலும் மிடில் ஓவர்களில் சிறப்பாக கட்டுப்படுத்தியது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் மீண்டும் ரன்களை வாரிக்கொடுத்து 200 ரன்களை இலங்கை அணி கடந்துவிட்டனர்.
அதை சேஸ் செய்த போது இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனாலும் அக்சர் பட்டேல் – சூரியகுமார் யாதவ் இரண்டு பேரும் சிறப்பாக அணியின் ஸ்கோரை நன்றாக எடுத்துச் சென்றனர். இறுதியில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை இந்திய அணி எடுத்தது.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அர்சதீப் சிங், சிவம் மாவி மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரின் பந்துவீச்சு கடைசி ஐந்து ஓவர்களில் எடுபடாதது தான். ஹர்திக் பாண்டியா இந்த நேரத்தில் நன்றாகவே கேப்டன் பொறுப்பு வகித்தார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் கூறியதாவது:
“ஹர்திக் பாண்டியா நன்றாகவே கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்டார். இந்திய அணி போட்டியில் தோல்வியுற்றது என்பதற்காக ஹர்திக் பாண்டியா தவறு செய்துவிட்டார் என்று அல்ல. பவுலர்களை அவர் நன்றாகத்தான் பயன்படுத்தினார். ஆனால் நோ-பால் மற்றும் ஒய்டுகள் அவர் கையில் இல்லை. அது முழுக்க முழுக்க பௌலர்களின் பொறுப்பு. அது தவறும் பொழுது ஹர்திக் பாண்டியா என்ன செய்ய முடியும்.
ஐபிஎல் போட்டிகள் ஆகட்டும், சர்வதேச போட்டிகள் ஆகட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று அணியை நன்றாக வழிநடத்தி இருக்கிறார். மிகவும் கூலான கேப்டனாக இருக்கிறார். அதேநேரம் அவரது மனதில் ஆக்ரோஷமும் இருக்கிறது. அணியில் தனக்கான வீரர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார். நல்ல மனநிலையுடன் வைத்துக் கொள்கிறார் . இந்த விதத்திலும் கூலாக கையாள்கிறார்.” என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.