ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா இறங்கினர். சென்னை அணியின் அசத்தல் பந்து வீச்சில் மும்பை வீரர்கள் ரன்கள் குவிக்க திணறினர்.
இதனால் 50 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 43 பந்தில் 59 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குருணால் பாண்டியா 42 ரன்னில் வெளியேறினார். கடைசி 2 ஓவரில் மும்பை அணி அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்டியா 25 ரன்னுடனும், பொல்லார்டு 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், மோஹித் சர்மா, இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் ராயுடு ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் பெரேன்டர்ப் வீசிய பந்தில் வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த் ரகானே தனது பானியில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 6.2 வது ஓவரில்
மலிங்கா வீசிய பந்தில் வாட்சன் 5 (6) ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ரெய்னா 16 (15) ரன்கள் எடுத்து பெரேன்டர்ப் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக டோனியும், ஜாதவும் ஜோடி சேர்ந்து ரன்களை உயர்த்த தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் 14.1 ஓவரில் கேப்டன் டோனி 12 (21) பாண்டியா வீசிய பந்தில் சூர்ய குமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய ஜடேஜா வந்த வேகத்தில் பாண்டியா வீசிய பந்தில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலின் திரும்பினார். ஆட்டத்தின் 16 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.
ஆட்டத்தின் 17.1 வது ஓவரில் மலிங்கா வீசிய பந்தில் கேதர் ஜாதவ் 54 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்ததாக பிராவோ 8 (9) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஒவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இறுதியில் வெற்றி முகம் கொண்ட சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பெரேன்டர்ப் 2 விக்கெட், மலிங்கா, பாண்டியா தலா மூன்று விக்கெட்களை பெற்றனர்.