சும்மா ஒன்னும் சொல்லல…. பெரிய திறமைசாலி… கண்டிப்பா பெரிய ஆளா வருவான்; சென்னை வீரரை மனதார பாராட்டிய ஹர்திக் பாண்டியா
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட்டை குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் தேதி துவங்கியது.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் (63), விர்திமான் சஹா (25), விஜய் சங்கர் (27) மற்றும் இக்கட்டான கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் திவாடியா (15) மற்றும் ரசீத் கான் (10) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பின் மூலம் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்களை பேசிய குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட சென்னை அணியின் ருத்துராஜ் கெய்க்வாட்டை மனதார பாராட்டியும் பேசியுள்ளார்.
ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “ருத்துராஜ் கெய்க்வாட் களத்தில் இருந்தவரை போட்டி எங்களது கையைவிட்டு சென்று விட்டதை போன்றே இருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் விளையாடிய விதத்தை வைத்து பார்த்தபோது ஒரு கட்டத்தில் சென்னை அணி இலகுவாக 200+ ரன்கள் எடுத்துவிடும் என்றே தோன்றியது. ருத்துராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங்கை பாராட்டியே ஆக வேண்டும். அவர் அடித்த பல ஷாட்கள் தனித்துவம் மிக்கது, பந்துவீச்சாளர்கள் செய்யும் தவறுகளை மட்டும் பயன்படுத்தி கொண்டு ருத்துராஜ் சில நல்ல ஷாட்கள் அடித்து ரன் சேர்க்கவில்லை, அவர் சவாலான சில பந்துகளை கூட மிக எளிதாக எதிர்கொண்டார். அவர் இதே போன்றே தொடர்ந்து விளையாடினாலும், சென்னை அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கே பல அற்புதங்களை அவர் செய்து கொடுப்பார். இதற்கான அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது, அவருக்கான நேரம் வரும் பொழுது இந்திய அணியும் அவருக்கான அதிகமான வாய்ப்புகளை வழங்கும் என முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.