பதிரானா இல்லை… எங்க தோல்விக்கு இந்த ஒரு மனுசன் தான் காரணம்; தோல்விக்கான காரணத்தை கூறிய ஹர்திக் பாண்டியா !!

பதிரானா இல்லை… எங்க தோல்விக்கு இந்த ஒரு மனுசன் தான் காரணம்; தோல்விக்கான காரணத்தை கூறிய ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் கெத்தான வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த மும்பை – சென்னை இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்பின் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சிவம் துபே 66  ரன்களும், கடைசி நேரத்தில் தல தோனி 4 பந்தில் 20 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா அதிரடியான துவக்கம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தாலும், எதிர்முனையில் களமிறங்கிய வீரர்கள் பதிரானா  உள்ளிட்ட சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறி சீரான இடைவேளையில் விக்கெட்டையும் இழந்தும் வெளியேறினர்.

ரோஹித் சர்மா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்து தனி ஆளாக போராடினாலும், முக்கியமான நேரத்தில் பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை மாற்றி கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “சென்னை அணி எங்களுக்கு நிர்ணயித்த இலக்கு எட்டக்கூடிய இலகுவான இலக்கு தான். ஆனால் சென்னை அணி பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு போட்டியின் முடிவையும் மாற்றிவிட்டது. குறிப்பாக பதிரானா வித்தியாசமாக செயல்பட்டார். சென்னை அணி தங்களது திட்டங்களை மிக சரியாக செயல்படுத்தினர். அதே போன்று ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கும் தோனி சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை மிக சரியாக வழிநடத்தினார். தோனி வகுத்த வியூகங்களும், அவரின் வழிகாட்டுதலும் சென்னை அணி பயனளித்துள்ளது. ஆடுகளத்தின் தன்மை மாறி கொண்டே இருந்தது. பதிரானா பந்துவீச வருவதற்கு முன்பு அனைத்துமே எங்கள் கைவசம் தான் இருந்தது, அதைவிட சரியான துவக்கம் எங்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. தவறுகளை நிச்சயமாக சரி செய்து கொள்வோம். எங்களது அடுத்த நான்கு போட்டிகள் வெளி மாநிலங்களில் நடைபெற உள்ளது, சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம். தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.