இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) பிசிசிஐ நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்துள்ளனர்.
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் விளையாடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து, அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து, விளையாடும் லெவனில் மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மிதாலி ராஜை தேர்வு செய்யாத முடிவை நியாயப்படுத்தி பேசினார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் வலுவாக உருவெடுத்தது. மிதாலி ராஜின் மேலாளர் ஹர்மன்பிரீத் கௌர் ஒரு பொய்யர், பக்குவமில்லாதவர், தந்திரமானவர், ஏமாற்றுபவர் மற்றும் தகுதியில்லாத கேப்டன் என கடுமையாக சாடினார். இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் மிதாலி ராஜிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அணி மேலாளர் த்ருப்தி பட்டாச்சார்யா ஆகியோர் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை இன்று தனித்தனியாக சந்தித்துள்ளனர். இதுதொடர்பாக, பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோஹ்ரி கூறுகையில்,
“மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் த்ருப்தி பட்டாச்சார்யாவை நாங்கள் சந்தித்தோம். அவர்களது தனிப்பட்ட பார்வையை கேட்பதற்காக அவர்களை தனித்தனியாக சந்தித்தோம். நாங்கள் அனைத்தையும் குறிப்பிட்டுவைத்திருக்கிறோம். இந்த சந்திப்பின்போது நடைபெற்ற ஆலோசனை குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை இவர்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நிர்வாகக் குழு ஆராய்ந்து, தேவைப்பட்டால் அவர்களிடம் தனித்தனியாக பேசுவார்கள் என்று தெரிகிறது.