மகளிர் டி20 உலககோப்பை துவங்கும் முன்பாக பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர்!

உலக கோப்பையை வென்றால் விஷயங்கள் மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். சிட்னியில் 21-ந்தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சி சிட்னியில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் உள்பட அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த முறை எங்களுடன் இருந்த அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளை இந்த தடவை நாங்கள் இழக்கிறோம். இருப்பினும் இளம் வீராங்கனைகளை கொண்ட இந்திய அணி நல்ல வளர்ச்சி கண்டு இருப்பதுடன் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி வீராங்கனைகள் செயல்பட்டு வருகிறார்கள். நமது அணி நல்ல நிலையில் இருக்கிறது.

நமது அணி நாளுக்கு, நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. அணியினர் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர். உலக கோப்பையை வென்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய விஷயமாகும். எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். நாங்கள் உலக கோப்பையை வென்றால் விஷயங்கள் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற போட்டிகள் வீராங்கனைகளுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

Harmanpreet Kaur of India set the field during the ICC Women’s World T20 2nd semi-final match between England and India at Sir Vivian Richards Cricket Ground, North Sound, Antigua and Barbuda, on November 22, 2018. (Photo by Randy Brooks / AFP) (Photo credit should read RANDY BROOKS/AFP/Getty Images)

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் அளித்த பேட்டியில், ‘‘20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். உள்ளூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அனுபவித்து விளையாட விரும்புகிறோம். உள்ளூரில் உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஏதாவது ஒரு முறைதான் கிடைக்கும். நெருக்கடியும், எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கத்தான் செய்யும். எல்லா அணிகளை போல் நாங்களும் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.