கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார் ஹாரி புரூக். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 228 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 19ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ரானா.
இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களா ஹாரி புரூக் மற்றும் மயாங்க் அகர்வால் இருவரும் களம் இறங்கினர். ஹைதராபாத் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை.
மயாங்க் அகர்வால் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு, உள்ளே வந்த ராகுல் திரிப்பாதி 4 பந்துகளில் ஒன்பது ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் ஆண்ட்ரே ரஸல் தூக்கினார்.
2 விக்கெட்டுகள் போனபின், களமிறங்கிய கேப்டன் எய்டன் மார்க்ரம் தனது அதிரடியான ஆட்டத்தை வந்த உடனேயே துவங்கினார். மறுமுனையில் ஹாரி புரூக், ஏற்கனவே அதிரடியாக விளையாடி வந்தார். இருவருமே கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார் எய்டன் மார்க்ரம். இவர் 50 ரன்கள் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார்.
அடுத்ததாக உள்ளே வந்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, தனது பங்கிற்கு முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஹைதராபாத் அணியின் ஸ்கோர் நிற்காமல் உயர்ந்தது. இவர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
ஒரு முனையில் நின்றுகொண்டு பவுண்டரி சிக்ஸர்களாக அடித்து வந்த ஹாரி புரூக், இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார். 55 பந்துகளில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமலும் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் மூன்று லீக் போட்டிகளில் மோசமாக விளையாடி அவுட் ஆனதால் இவரை எதற்காக 13.25 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தீர்கள். இந்திய கண்டிஷனுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்கிற பல கருத்துக்கள் விமர்சனங்கள் ஹாரி புரூக் மீது வைக்கப்பட்டது.
இப்போட்டியில் சதம் அடித்து பலரின் கருத்துக்களுக்கு பதில் கூறியிருக்கிறார் ஹாரி புரூக். அடுத்து உள்ளே வந்த கிளாசன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 6 பந்துகளில் 16 ரன்கள் அடித்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.