“பண்ட் தான் இருக்காரே.. இனி இவர் எதற்கு?” – தோனியை சீண்டும் ஹர்ஷா போலே?

முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் அணியில் இருக்கிறாரே? இனி இவர் அணியில் எதற்கு என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இந்திய அணியின் தேர்வுக்குழுவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரை அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு, 3 ஒருநாள் போட்டிகள் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கடந்த ஞாயிறு அன்று வெளியிட்டார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி இருப்பாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக அவரே தெரிவித்ததால், இத்தொடரில் அவரை எடுக்கவில்லை.

இந்த தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் முதன்மை கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார். இருப்பினும் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியிலும் முதன்மை கீப்பராக இருப்பார் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்ததால், கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக ஹர்ஷா போக்லே தேர்வுக்குழுவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

“முதன்மை கீப்பராக ரிஷப் பண்ட் இருக்கும் பொழுது விருத்திமான் சஹா ஏன் அணியில் இடம்பெற்றுள்ளார். அவரை எடுப்பதற்கான காரணம் என்ன?” என கேட்டார்.

“பாதுகாப்பிற்காக இரண்டாவது கீப்பராக சஹா எடுக்கப்பட்டிருந்தால், அதே பாதுகாப்பிற்காக இன்னொரு கீப்பரை ஏன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எடுக்கவில்லை?” எனவும் கேள்வி எழுப்பினார்.

Prabhu Soundar:

This website uses cookies.