ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சீண்டிய வீரர்கள் 3 ஆப்கன் வீரர்களுக்கு 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய மற்றொரு சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுடன் மல்லுகட்டியது. பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றமாக முகமது அமிர், பஹீம் அஷ்ரப் மற்றும் உடல்தகுதியுடன் இல்லாத ஷதப்கான் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது நவாஸ், ஹாரிஸ் சோகைல் மற்றும் அறிமுக வீரராக ஷகீன் அப்ரிடி இடம் பெற்றனர்.
‘டாஸ்’ ஜெயித்த ஆப்கானிஸ்தான் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இன்னிங்சை தொடங்கி நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இசனுல்லா (10 ரன்), முகமது ஷாசாத் (20 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஆனால் மிடில் வரிசை வீரர்கள் பொறுப்புடன் ஆடி அணியை நிமிர வைத்தனர். ரமத் ஷா 36 ரன்களும், கேப்டன் அஸ்கார் ஆப்கன் 67 ரன்களும் (56 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) நொறுக்கினர்.
இதே போல் ஹஷ்மத்துல்லா ஷகிடியும், பாகிஸ்தான் பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார். பாகிஸ்தானின் பீல்டிங் மோசமாக இருந்தது. நிறைய கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். அதை சாதகமாக பயன்படுத்தி இறுதிகட்டத்தில் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திய ஹஷ்மத்துல்லா, உஸ்மான் கானின் இறுதி ஓவரில் 3 பவுண்டரி விரட்டி, சதத்தை நெருங்கினார். பெரிய அணிகளுக்கு எதிராக இதுவரை ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் சதம் கண்டதில்லை என்ற சோகத்துக்கு முடிவு கட்ட கடைசி பந்தில் ஹஷ்மத்துல்லாவுக்கு 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தை உஸ்மான் கான் சாதுர்யமாக வீசி அவரது செஞ்சுரி கனவை தகர்த்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. ஹஷ்மத்துல்லா ஷகிடி 97 ரன்களுடன் (118 பந்து, 7 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக பகர் ஜமான் மற்றும் இமாம் உல்-அக் ஆகியோர் களமிறங்கினர். முஜூப் அர் ரகுமான் வீசிய முதல் ஓவரிலேயே பகர் ஜமான் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
இறுதியில் சோயப் மாலிக்-ன் அதிரடியால் அந்த அணி 49.3 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. சோயப் மாலிக் 51 ரன்களுடனும் ஹசன் அலி 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் முஜீப் அர் ரகுமான் 2 விக்கெட்டையும் அப்டாப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.