நான் இப்படி பேசுன யாரையுமே பார்த்ததில்லை, பிரஸ் மீட்டில் ஹர்திக் பாண்டியா பேசியதற்கு பெரிய சலியூட்! – பாராட்டிய அஸ்வின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் இருக்க மாட்டேன் என்று பிரஸ் மீட்டில் தைரியமாக சொன்ன ஹர்திக் பாண்டியாவை பாராட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதனை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியும் விட்டது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிட்டது.

வருகிற ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி நடக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். பேட்டிங் செய்வதற்கும் நன்றாக இருக்கும் என்பதால், இங்கிலாந்துக்கு செல்லும் அணிகள் தங்களது அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை வைத்துக் கொள்வது வழக்கம்.

பைனலுக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியில் நிறைய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியில் சர்துல் தாக்கூர் மட்டுமே இருக்கிறார். கூடுதலாக ஹர்திக் பாண்டியாவை அழைத்துச் சென்றால் சாதகமாக இருக்கும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எதிலும் பங்கேற்கவில்லை. லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மா இல்லாததால், துணைகேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா ஈடுபட்டார்.

அதில் ஹர்திக் பாண்டியாவிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நீங்கள் இருப்பீர்களா? இங்கிலாந்து மைதானம் உங்களுக்கு சாதகமாக இருக்குமே? என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், “இத்தனை வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடவில்லை. அதற்கான உழைப்பையும் கொடுக்கவில்லை. ஒரு சதவீதம் கூட உழைக்காத நான் எப்படி அணியில் இடம் பெறுவது நியாயமானதாக இருக்கும். ஆகையால் நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நிச்சயம் விளையாடவில்லை.” என்று பதில் கூறினார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த பதிலுக்கு பலரும் பாராட்டி வந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் இதனை பாராட்டி பேசியுள்ளார்.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. பைனலில் ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். அதற்கேற்றவாறு இங்கிலாந்தில் அவர் நன்றாகவும் செயல்பட்டு இருக்கிறார். இது குறித்து ஹர்திக் பாண்டியா பிரஸ் மீட்டில் பேசியபோது, ‘நான் அதற்காக உழைக்கவில்லை. நான் அணியில் இருந்தால் நியாயமாக இருக்காது.’ என்று கூறியது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் பலரும் அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, இப்படி வெளிப்படையாக உண்மையை பேசியிருப்பது சிறப்பானது. ஹர்திக் பாண்டியா மீது கூடுதல் மதிப்பு எனக்கு வந்திருக்கிறது. அவருக்கு என்னுடைய சல்யூட்டை கொடுக்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.