ஆஸ்திரேலிய  அணியுடன் பயிற்சி போட்டி வேண்டும்; ரவி சாஸ்திரி வேண்டுகோள் !!

ஆஸ்திரேலிய  அணியுடன் பயிற்சி போட்டி வேண்டும்; ரவி சாஸ்திரி வேண்டுகோள்

ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளை ஏற்பாடு செய்ய பி.சி.சி.ஐ.,க்கு ரவி சாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் டி.20 தொடரை மட்டும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் படுமோசமாக இழந்தது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி மீதும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்திய இங்கிலாந்து மண்ணில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணியால் அடுத்தடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடனான தொடரில் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பி.சி.சி.ஐ.,க்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது;

டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

Mohamed:

This website uses cookies.