இரண்டாவது டெஸ்ட் முடிந்தவுடன், ஜடஜாவிடம் சென்று எனக்கு ஏதாவது டிப்ஸ் இருக்குமா? என்று கேட்டேன், அப்போது ஜடேஜா எனக்கு சொன்னது இதுதான் என்று சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் மேட் குன்னமென்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இரண்டிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
முதல் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதேநேரம் ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்களால் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியவில்லை. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து, ஜடேஜா 17 விக்கெட்கள் மற்றும் அஸ்வின் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதைத்தொடர்ந்து இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இல்லாத அளவிற்கு தாக்குதலை ஏற்படுத்தி இந்தியாவை திக்குமுக்காட வைத்தனர். 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
இதில் ஆஸி., ஸ்பின்னர் மேட் குன்னமென் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த பிறகு பேட்டி அளித்த அவரிடம் நிருபர் ஒருவர், ‘இந்தியாவின் இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவிடமிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த குன்னமென்,
“ஆம், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சில நுணுக்கங்களை செய்தார். பந்து பழையதாக மாறும்பொழுது, அவர் ரிலீஸ் செய்யும் இடத்தை மாற்றுகிறார். இதனால் எதிர்பார்த்த இடத்திற்கு சரியாக பிட்ச் செய்து பேட்ஸ்மேனை திணறடித்தார். இந்த ஒரு நுணுக்கத்தை நான் புரிந்து கொண்டேன். அதன்பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதை செயல்படுத்தினேன்.” என்றார்.
மற்றொரு நிருபர், ‘இரண்டாவது டெஸ்ட் முடிந்த பிறகு ஜடேஜாவிடம் பேசினீர்களா?.’ என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய குன்னமென், “ஆம், ஜடேஜா எனக்கு ஏதாவது டிப்ஸ் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு, ‘இருக்கிறது, ஆனால் இந்த டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு கூறுவேன்.’ என்று சொன்னார்.” என சிரித்தபடி பேட்டியளித்தார்.