அந்நியச் செலவானி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிமீறல் காரணமாக அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
ஐபிஎல் 2-ஆவது சீசன் போட்டிகள் பாதுகாப்பு காரணம் கருதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் 4.98 கோடி அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்துள்ளது.
4.98 கோடி அமெரிக்க டாலர் என்பது மிகப் பெரிய தொகை என்பதால் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்யக் கூடாது. இந்த விவகாரம் குறித்தான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை 2011-இல் மேற்கொண்டது. சீனிவாசன், பிரசன்ன குமார் உள்ளிட்ட பிசிசிஐயின் உயர் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் இது தொடர்பானவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, மே 31-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்த அமலாக்கத் துறை சீனிவாசன் உள்ளிட்டவர்களுக்கு அபராதம் விதித்தது.
அதன்படி, சீனிவாசன், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலீத் மோடி உட்பட இந்த விவகாரம் தொடர்பானவர்களுக்கு 121 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதில் பிசிசிஐ ரூ.82.66 கோடி, சீனிவாசன் ரூ.11.53 கோடி, லலீத் மோடி ரூ.10.65, முன்னாள் பிசிசிஐ பொருளாளர் பாண்டோவ் ரூ.9.72 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ட்ராவன்கோர் ரூ.7 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.
இதற்கிடையில், சீனிவாசன் மற்றும் பிரசன்ன குமார் அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, அமலாக்கத் துறையை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. அதனால், மனுதாரர் இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக் கூடாது என்றும் நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டார்.