ஜோ ரூட் அடுத்த சச்சின் டெண்டுல்கராக உருவெடுத்து வருகிறார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பாய்காட் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 19 சதங்கள் அடித்திருக்கிறார். அத்துடன் 8250 ரன்களையும் குவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய சொற்ப வீரர்களுள் இவரும் ஒருவராக இருக்கிறார் என பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் சச்சின் இருவரையும் ஒப்பிட்டு, ரூட் சச்சினை போலவே உருவெடுத்து வருகிறார்; விரைவில் சச்சினை மிஞ்சும் அளவிற்கு சாதனை படைப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜெப்ரி பாய்காட். அவர் அளித்த பேட்டியில்,
“தற்போது 30 வயதாகும் ஜோ ரூட் 100வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த சாதனையை நிச்சயம் அடுத்த சில வருடங்களில் ஜோ ரூட் நிகழ்த்துவார். அதேபோல் சச்சின் அடித்துள்ள டெஸ்ட் அரங்கில் 16 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கையும் ரூட் கடந்து சாதனை படைப்பார் என நான் நினைக்கிறேன்.
தற்போதைய காலகட்டத்தில் விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன் போன்ற சிறந்த வீரர்கள் உடன் ஒப்பிடும் அளவிற்கு அவர்களை விடவும் நன்றாக விளையாடி வருகிறார் ரூட். சச்சின் தனது 99 போட்டிகளில் 8350 ரன்கள் அடித்திருந்தார். இவருக்கும் 100 ரன்கள் மட்டுமே வித்தியாசம் ஆகையால் அவரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிப்பதில் எந்தவித தடங்களும் இருக்காது என நம்புகிறேன். ரூட் அணியை நன்றாக வழி நடத்திச் செல்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடர் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.” எனவும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.