விராட் கோலிக்கு வேண்டாம்… தொடர் நாயகன் விருதை வெல்ல தகுதியான ஆள் இவர் தான்; யுவராஜ் சிங் விருப்பம்
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது முகமது ஷமிக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி 19ம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை தொடர் நிறைவடைய உள்ளதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்தும், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்தும், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங், தொடர் நாயகன் விருது முகமது ஷமிக்கு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், “இந்திய அணி எப்போதும் வலுவான அணியாக உள்ளது. ஹர்திக் பாண்டியா காயத்தால் திடீரென விலகியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தாத அளவிற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருகின்றனர். குறிப்பாக முகமது ஷமி இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார். முகமது ஷமி இறுதி போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இறுதி போட்டியில் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக நிலவி வருகிறது. என்னை பொறுத்தவரையில் தொடர் நாயகன் விருதிற்கு மற்ற வீரர்களை விட முகமது ஷமி தான் தகுதியான நபர்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய யுவராஜ் சிங், “ரோஹித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் உலகக்கோப்பையை தங்களது கைகளில் ஏந்த முழு தகுதியானவர்கள். அவர்களுக்கு தற்போது நல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இவ்வளவு வலுவானதாக இல்லை, ஆனால் பும்ராஹ் மற்றும் கே.எல் ராகுலின் வருகைக்கு பிறகு இந்திய அணிய்ல் பெரிய மாற்றமும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.