ஷுப்மன் கில் சதம் அடித்திருந்தாலும், அதற்கு அடித்தளம் இட்டது ராகுல் திரிப்பாதி என்று சுட்டிக்காட்டியுள்ளார் சஞ்சய் பாங்கர்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 234 ரன்கள் அடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் வீரர் ஷுப்மன் கில். 63 பந்துகளில் 126 ரன்களை இவர் விளாசியதால் இந்திய அணியால் இவ்வளவு பெரிய ஸ்கூரை எட்ட முடிந்தது.
ஆனால் போட்டியின் முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ஆட்டம் இழந்து வெளியேறினார். இரண்டாவது ஓவரின் போது உள்ளே வந்த ராகுல் திரிப்பாதி, விக்கெட் போனதைப் பற்றி கவலையே இல்லாமல் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். ராகுல் திரிப்பாதி அமைத்துக் கொடுத்த இந்த அதிரடியை ஷுப்மன் கில் கடைசி வரை எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் சதம் அடித்த ஷுப்மன் கில்லை பாராட்டிய நாம், ராகுல் திரிப்பாதி கொடுத்த பங்களிப்பை பேசத் தவறிவிட்டோம் என்று சுட்டிக் காட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்.
“அனாயசமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ராகுல் திரிப்பாதி அவுட் ஆனது நிச்சயம் துரதிஷ்டவசமாகும். பைன்-லெக் திசையில் சிக்சர் அடித்தார். அதேபோல் கவர் திசையிலும் சான்டனர் பந்தை சிக்ஸர் அடித்தார். டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்திவந்த சாண்ட்னர் நிலைகுலைந்து போனது இவரது பேட்டிங்கில் தான். அதன் பிறகு மேலும் 3 பவுண்டரிகளை விளாசினார். அபாரமான ரிதம் இவரது பேட்டிங்கில் வெளிப்பட்டது. அணி நிர்வாகம் இவருக்கு கொடுத்த ரோலுக்கு முழுக்க முழுக்க நியாயம் சேர்த்திருக்கிறார்.
ஆனால் இவரை பலரும் கொண்டாட தவறிவிட்டனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அறிவார்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இவரைப் பற்றி பேசாதது ஏமாற்றம் அளித்தது. சதம் அடிப்பது சிறப்பான ஒன்றாக இருந்தாலும், அதை தாண்டி ஆட்டத்தை எப்படி எதிரணியிடமிருந்து நம் பக்கம் திருப்புகிறோம் என்பதில்தான் கிரிக்கெட் இருக்கிறது. இந்த வேலையை ராகுல் திரிப்பாதி நன்றாக செய்தார்.” என பேசினார்.