உலகிலேயே மிகச்சிறந்த டி20 வீரர் இவர்தான் என மனம் திறந்து பேசியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிஸ் கோவர்.
உலக நாடுகளில் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய தொடராக இருப்பது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடராகும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் காலவரையறையின்றி தள்ளிச் சென்று கொண்டிருந்தது.
டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறாது என ஐசிசி தெரிவித்த பிறகு, அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து ஏற்கனவே பல இந்திய வீரர்கள் துபாய் மற்றும் அபுதாபி சென்றுவிட்டு, தங்களது பயிற்சிகளை துவங்கிவிட்டனர்.
வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் இருக்கும் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வருவர். பல வீரர்கள் அணியில் ஏற்கனவே இணைந்து விட்டனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர், கிரிக்கெட் உலகையே எவ்வாறு மாற்றியிருக்கிறது மற்றும் சிறந்த டி20 பிளேயர் யார்? என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் வர்ணனையாளரும் மற்றும் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனுமான டேவிஸ் கோவர் அவர் அளித்த பேட்டியில்,
“ஐபிஎல் தொடர் ஆரம்பித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் டி20 குறித்த பார்வை முற்றிலுமாக மாறி இருக்கிறது. அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் பங்கேற்பதால் பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இளம் வீரர்கள் பலர் கிரிக்கெட் உலகிற்கு கிடைப்பதற்கு ஒரு வழியாகவும் ஐபிஎல் அமைந்திருக்கிறது.” என பேசினார்.
மேலும், “டி20 உலகில் சிறந்த வீரராக திகழ்ந்து வருபவர் கீரன் போலார்டு. மும்பை அணிக்காக பல போட்டிகளை கடைசி வரை நின்று வென்று கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு நன்றாக தெரியும், தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு சரிபட்டு வரமாட்டோம் என்று.” என்றார்.