கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் தொடர்ந்து வீணடித்து வரும் மணிஷ் பாண்டேவிற்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளதால், இலங்கை தொடரில் அதிகமான இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கிடைத்தது. இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான், மணிஷ் பாண்டே போன்ற ஒரு சில அனுபவ வீரர்களே அணியில் இடம்பிடித்தனர்.
இதனால் ஷிகர் தவான், மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள் தான் இளம் வீரர்களை சரியாக வழிநடத்தி வெற்றியும் பெற்று கொடுப்பார்கள் என கருதப்பட்டது, ஆனால் நடந்ததோ அதற்கு நேர் மாறாக இருந்தது. சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இதன் மூலமே இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றது.
மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷ் பாண்டே ரசிகர்களின் மிகப்பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளார். மணிஷ் பாண்டேவிற்கு இனி அணியில் இடமே கொடுக்க கூடாது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், அதே போல் முன்னாள் வீரர்களும் மணிஷ் பாண்டேவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கும் தன் பங்கிற்கு மணிஷ் பாண்டே மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், “மனீஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். இருவருமே 15-20 ரன்கள் மட்டுமே அடிக்கின்றனர். அவர்கள் இருவருமே என்னை பெரிதும் அதிருப்தியடைய செய்துள்ளார்கள். இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ஆதாயத்தை அடைந்தது மனீஷ் பாண்டே தான். 3 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்ற அவர், பேட்டிங் ஆடவும் வாய்ப்பு பெற்றார். இவ்வளவுக்கும் அவர் இறங்கும்போது ஒரு போட்டியில் கூட அணி இக்கட்டான நிலையில் இல்லை. அப்படியிருந்தும் 3 போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. எனவே மனீஷ் பாண்டேவிற்கு இனிமேலும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.