சூரியகுமார் யாதவிற்கு நேரம் சரியில்லை. இதனால்தான் அவரை கடைசி 15 ஓவர்கள் களம் இறக்கினோம் என்று தனது சமீபத்திய பேட்டியில் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடர் சமனில் இருந்தது.
தொடரை யார் கைப்பற்றுவார் எனும் டிசைடர் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. இதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இது ஒருபுறமிருக்க, ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத காரணத்தால் பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்பட்ட சூரியகுமார் யாதவ், 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் ஆன முதல் வீரர் என்ற மோசமான வரலாற்றை படைத்தார்.
சூரியகுமார் மீது இப்போது கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தொடரை இழந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவரும் பொறுமையுடன் பதில் கூறினார். ரோகித் சர்மா பேசியதாவது:
“இந்த தொடரில் மூன்று பந்துகள் மட்டுமே சூரியகுமார் ஆடியிருக்கிறார். மூன்றும் சிறந்த பந்துகள். இதை வைத்து எப்படி அவரை விமர்சிப்பது. மூன்றாவது போட்டியில் அவருக்கு வந்தது அவ்வளவு சிறப்பான பந்து இல்லை. அதை முன்னோக்கி சென்று விளையாடியிருக்க வேண்டும். அவருக்கு நன்றாகவும் அது தெரியும். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஸ்பின்னர்களை எப்படி விளையாடுவார் என்று நன்றாக பார்த்திருக்கிறோம். கை தேர்ந்தவர்.
இன்னும் ஸ்பின்னர்களுக்கு ஓவர்கள் இருக்கின்றது என்ற காரணத்தினால் தான் கடைசி 15 ஓவர்களில் அவரை களம் இறக்கினோம். துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்து விட்டார். ஜாம்பவான்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நிறைய திறமை மற்றும் நுணுக்கம் அவரிடம் இருக்கிறது. இப்போது அவருக்கு நேரம் சரியில்லை. மோசமான கட்டத்தில் இருக்கிறார். விரைவில் அதிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.” என்றார்.