இந்திய அணியின் ஸ்பெஷல் வீரர் இவர் தான்; பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார்
இளம் வீரரான ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அவர் இந்திய அணியின் ஸ்பெஷல் ப்ளேயர் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள் நுழையும்போது முன்னாள் கேப்டன் தோனியின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக அளவில் வாய்ப்பு கொடுத்த போதிலும் ரிஷப் பண்ட்-ஆல் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இதனால் ஒருநாள் போட்டிகளுக்கு கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினார்.
இந்நிலையில் இன்னும் ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கிறது என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரதோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விக்ரம் ரதோர் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட்-க்கு கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. அணி நிர்வாகம் இன்னும் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அவர் சிறப்பான வீரர் என்பதை நாங்கள் நம்புகிறோம். அவர் ரன்கள் அடிக்க தொடங்கிவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருப்பார்.
இன்னும் தோனி இந்திய அணிக்காக விளையாடும் நோக்கில்தான் உள்ளார். அவரது எதிர்காலம் குறித்து என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. ரிஷப் பண்ட் சில போட்டிகளில் சொதப்பியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், இதுபோன்ற சில விஷயங்கள் வலிமையாகவும், சிறந்த வீரராகவும் உருவாக்கும்’’ என்றார்.