டி20 உலக கோப்பை பிளேயிங் லெவனில் டிம் டேவிட் நிச்சயம் இருப்பார் என்று ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான்கள் ஆடம் கில்கிரிஸ்ட் மற்றும் மார்க் வாக் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணியில் தொடர்ச்சியாக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்த டிம் டேவிட், இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியா அணையால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அறிமுகமான முதல் போட்டியிலேயே களமிறங்கி முக்கியமான கட்டத்தில் 18 ரன்கள் அடித்து சிறப்பான பங்களிப்பை கொடுத்ததால், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் 27 பந்துகளில் 54 ரன்கள் விலாசி ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவனில் இவர் இருப்பார் என்று ஜாம்பவான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிரிஸ்ட் மற்றும் ஜாம்பவான் பேட்ஸ்மேன் மார்க் வாக் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். கில்கிறிஸ்ட் கூறுகையில், “டிம் டேவிட் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். அவருக்கு பவர் மற்றும் சரியான தருணத்தில் தனது அதிரடியை துவங்கும் விதம் என அனைத்தும் துல்லியமாக இருக்கிறது. கடந்த 18 மாதங்களாக அவரை நான் கவனித்து வருகிறேன். பல்வேறு நாடுகளில் பல்வேறு மைதானத்தின் சூழல்களில் அவர் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்திருக்கிறார். அதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியில் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் இவருக்கு இடம் கொடுத்தால், 10 முதல் 15 பந்துகள் பிடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.” என்றார்.
டிம் டேவிட் பற்றி ஆஸ்திரேலியாவின் லெஜண்டரி பேட்ஸ்மேன் மார்க் வாக் கூறுகையில், “மிடில் ஆர்டரில் டிம் டேவிட் அசத்துகிறார். அவரது அதிரடி ஆஸ்திரேலியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. நிச்சயம் இவருக்கு 11 வீரர்களில் இடம் கொடுக்கப்பட வேண்டும். மிடில் ஓவர்களில் சுனக்கம் ஏற்படும்பொழுது இவரை போன்ற பேட்ஸ்மேன் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்துவார். மேலும் கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கும் இவர் உதவுவார்.” என்று தெரிவித்தார்.