தொடர்ந்து இப்படியே செய்தால் ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்று எச்சரிக்கை கொடுத்ததோடு, அறிவுரை கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.
2019ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை தொடருக்கு பிறகு, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் காரணமாக ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், பேட்டிங் மட்டுமே செய்து வந்தார். முழுமையாக பந்து வீச முடியவில்லை.
ஐபிஎல் தொடரில் இரண்டு வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் பந்துவீசவில்லை. இந்திய அணியிலும், முழுமையாக 4 ஓவர்களை டி20 போட்டிகளில் அவரால் வீச முடியாததால் தற்போது அணியில் எடுப்பதற்கே தேர்வுக் குழு அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பையின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் ஹார்திக் பாண்டியா. தற்போது மீண்டும் காயம் காரணமாக இந்திய தேசிய அகடமியில் சிகிச்சையில் இருந்து வருகிறார். நியூசிலாந்துடனான டி20 தொடரும் தென்ஆப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் விரைவில் குணமடைந்து இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லையெனில், வருகிற கிரிக்கெட் ஆண்டில் ஹார்திக் பாண்டியாவின் ஒப்பந்தம் நீக்கப்படும் என தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“ஹர்திக் பாண்டியா மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இப்படியே சென்றால் அவரால் டி20 போட்டிகளில் கூட நீடிக்க முடியாது. இன்னும் வொர்க் அவுட் செய்து உடல் எடையை அதிகரிக்க வேண்டும். ஹார்திக் பாண்டியா பற்றிய ரவி சாஸ்திரி சொன்னதைக் கேட்டேன். அதை வைத்துப் பார்க்கையில், டி20 போட்டிகளில் முழுமையாக 4 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத நிலையில் இருக்கிறார் என தெரிந்தது. அவருக்கு அதிக அவகாசம் இல்லை. விரைவில் குணமடைந்து உடல் எடையை அதிகரித்து பந்துவீச்சு பயிற்சியை தொடர வேண்டும். இந்தியா போன்ற அணியில் இடம் கிடைப்பதே அரிதாக இருக்கும்போது அதனை வீணடித்துவிடக் கூடாது.” என்றார்.