இனி அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இது உண்டு என ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆன பிறகு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக பார்க்கப்படுவது இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்ததுதான்.
இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதன்முறையாக பகல்-இரவு ஆட்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முன்னர் வெளியிட்டது.
துவக்கத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, நேர்மையான விமர்சனங்களே வந்தது. இதனைக் கண்ட கங்குலி, மக்கள் வரவேற்பின்படி, இந்தியாவில் நடைபெற இருக்கும் அனைத்து டெஸ்ட் தொடரிலும் குறைந்தபட்சம் ஒரு போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதி செய்யும் விதமாக நேற்றைய தினம் அவர் அளித்த பேட்டி இருந்தது. அதில் கங்குலி பேசியதாவது:
இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தோம். இதனை உறுதி செய்ய சற்று தயங்கினோம். ஏனெனில் எதிர்மறையான விமர்சனங்கள் வரக்கூடும் என்பதால். ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. இதன் மூலம் மக்களின் வரவேற்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
இனி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் குறைந்தபட்சம் ஒரு போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்து பிசிசிஐ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதேபோல், மற்ற கிரிக்கெட் வாரியங்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இவை அனைத்தும் கைகூடும் பட்சத்தில் நிச்சயம் அனைத்து டெஸ்ட் தொடரிலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் இருக்கும் என்றார்.
கங்குலியின் இந்த புதிய முடிவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.