போதும்… இனி அடுத்த வேலைய பாப்போம்; கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்; நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம் !!
நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்தவுடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், தன்னுடைய டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தான் ஏன் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினேன் என்பது குறித்து கேன் வில்லியம்சன், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றும் அளித்துள்ளார்.
அதில்,“நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டது உண்மையில் மிகப்பெரிய கெளரவமாகும், என்னை பொருத்தவரையில் கிரிக்கெட்டின் உச்ச நிலையே டெஸ்ட் தொடர் தான், அப்படிப்பட்ட தொடரின் கேப்டனாக செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியிலும் கேப்டனாக இருப்பது பல பொறுப்பு சுமைகளை கொடுக்கிறது, தற்பொழுது நான் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டுள்ளது சரியான நேரம் என கருதுகிறேன். நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் பேசிய பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை வழிநடத்துவதற்கும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது” எனவும கேன் வில்லியம்சன் தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லமிடருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற கேன் வில்லியம்சன், இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தனது அணிக்கு 22 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனது அணிக்கு வென்று கொடுத்தார். என்னதான் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்தாலும் உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.