இந்த ஒரு பையனால விராட் கோலி மட்டும் இல்ல… எல்லாருக்குமே பிரச்சனை தான்; அபிசேக் நாயர் சொல்கிறார்
பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரரான இஷான் கிஷனை முன்னாள் கிரிக்கெட் வீரரான அபிசேக் நாயர் பாராட்டி பேசியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை இலகுவாக வீழ்த்தி தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இளம் வீரர்கள் பயமே இல்லாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலமே, ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் இலகுவாக வீழ்த்த முடிந்தது. குறிப்பாக ரிங்கு சிங், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் தங்களக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரின் பாராட்டையும் இளம் வீரர்கள் பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில், ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான நடப்பு டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான அபிசேக் நாயர், இளம் வீரரான இஷான் கிஷனை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அபிசேக் நாயக் பேசுகையில், “இஷான் இஷன் ஒட்டுமொத்த இந்திய அணியிலுமே தனித்துவமிக்க வீரராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங் ஆர்டரில் அவருக்கு குறிப்பிட்ட இடமே இல்லை, எந்த இடத்தில் களமிறங்கினாலும் அவர் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக மிக சரியாக செய்து கொடுத்து வருகிறார். 4வது, 5வது இடம், மூன்றாவது இடம் என எந்த இடத்தில் களமிறங்கினாலும் அவர் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்படுகிறார், இதுவே அவரது வெற்றிக்கும் காரணமாக திகழ்கிறது. அனைத்து இடங்களிலும் களமிறங்குவதால், இஷான் கிஷன் மூலம் இந்திய அணிக்கும் பலம் கிடைத்து வருகிறது. அணியில் இருந்து யார் விலகினாலும், இல்லாவிட்டால் அவர்களது இடத்தை இஷான் கிஷனை வைத்து சரி செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.