வருகிற ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். அதற்கு உண்மையில் தகுதியானவர் அவர் தான் என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.
பல ஆசிய நாடுகள் பங்கேற்று பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் ஆசியன் கேம்ஸ், இந்த வருடம் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இந்திய அணி அனுப்பப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பு தெரிவித்துவிட்டது.
ஆண்களுக்கான இந்திய அணியும் அனுப்பப்பட உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லட்சுமணன் இந்த ஆசிய போட்டிகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.
உலகக்கோப்பை போட்டிகளின் சில போட்டிகளுடன் ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டியும் குறுக்கிடுவதால் முதன்மையான இந்திய அணி செல்ல முடியாது. ஆகையால் இரண்டாம் கட்ட இந்திய அணியை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது பிசிசிஐ. அதற்கு கேப்டனாக ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னணி வீரர்களில் ஒருவரை நியமிக்கலாம் என்கிற பேச்சுக்களும் அடிபடுகின்றன. டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது.
இந்த ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் தினேஷ் கார்த்திக்.
“ரவிச்சந்திரன் அஸ்வின் பல ஆண்டுகளாக முன்னணி இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வேறொரு கோணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் அஸ்வின புறக்கணிக்க முடியாத வீரராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியுடன் இருந்து வரும் அஸ்வின் கேப்டன்களில் ஒருவராக நியமிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் உடையவர். ஆனால் சர்வதேச இந்திய அணியில் அது நடைபெறவில்லை. ஆசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு இந்த கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும்.” என தினேஷ் கார்த்திக் கூறினார்.