ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரிஸ்ட் ஸ்பின் பவுலிங்கை வேறொரு தளத்துக்கு நகர்த்தியதில் முன்னணி வகிக்கும் இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் தன் பந்துகளை சிக்சர்களுக்குப் பறக்க விடுவார்கள் என்ற பயமெல்லாம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பின்னர்கள் பந்துகளை பிளைட் செய்யத் தயங்குவார்கள், ஆனால் சாஹல், குல்தீப் யாதவ் இருவருமே பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்லோவாக வீசி வேறொரு பரிமாணத்தை ஸ்பின்னுக்கு குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் கொண்டு வந்து ஆட்டத்தை சுவாரசியமாக மாற்றிவிட்டனர்.
பிரபல கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என் பந்துகளை வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள், ஏகப்பட்ட சிக்சர்கள் பவுண்டரிகளை வழங்கியிருக்கிறேன். அதனால் இனி ஒரு பயமும் இல்லை.
‘அய்யய்யோ சிக்ஸ் அடித்து விடுவாரோ’ என்ற பயமெல்லாம் போயே போய் விட்டது. பந்து வீச வரும்போதே தெரியும் 3 சிக்சர்கள் என்ன 6 சிக்சர்கள் கூட அடிப்பார்கள், அடிக்கட்டும் என்று நினைப்பேன். ஆனால் பேட்ஸ்மெனை அவுட் ஆக்கவும் செய்வேன் என்பதும் மனதில் ஓடும். எனவே அடி வாங்குவதில் எந்தக் கவலையும் இல்லை.
ஆர்சிபி அணிக்காக ஆடும்போது 4 ஓவர்களில் 45 கொடுத்தேன், கொல்கத்தாவுக்கு எதிராக 50+ ரன்கள் கொடுத்தேன்.
அப்போது என்ன நினைத்தேன் என்றால், ‘ஓகே நன்றாக வீசுகிறோம் ஆனாலும் 50 ரன்களை கொடுத்து விட்டோம். 60-65 ரன்கள் கொடுக்கவில்லை நல்ல வேளை என்று நினைப்பேன், இப்படி நினைக்கத் தொடங்கிய பிறகே ரன்கள் கொடுப்பது பற்றிய பயம் போய்விட்டது.
இதை அனுபவித்தாலே ஒழிய பயம் உங்களை விட்டுப் போகாது. எனக்கு இருமுறை நடந்து விட்டது. இதை விட மோசமாக இனி போக வாய்ப்பில்லை என்று தைரியமடைந்தேன்.
இவ்வாறு கூறினார் சாஹல்.