விளையாடி ஜெயிக்க முடியலேனா கூட பராவாயில்ல… ஆனா மழை இப்படி பண்ணிடுச்சே; ஷிகர் தவான் வேதனை
மழை காரணமாக நியூசிலாந்து அணியுடனான போட்டிகள் தடைபட்டது வேதனையளித்ததாக நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாகவே கருதப்பட்டது, ஆனால் டி.20 தொடரில் சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லையும் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொடரில் செயல்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், மழை காரணமாக போட்டிகள் தடைபட்டது வேதனையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர். அத்தொடரில் சிறப்பாக செயல்படுவது மிக முக்கியம்.இந்திய காலநிலைதான் அங்கும் இருக்கும். இதனால், அங்கு சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்” என்று தெரிவித்தார்.