‘விரல் இருக்காது என மிரட்டினார்கள்’ – 15 வயது நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்

பந்து வீசினால் கையில் விரல்கள் இருக்காது என சிறுவயதில் தனது எதிரணியை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். இந்நிலையில் சிறு வயதில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடிய போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அஸ்வின் கூறும்போது,“ எனது இளம் வயதில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது இறுதிப் போட்டியில் எங்கள் அணி விளையாட இருந்தது.

போட்டிக்கு புறப்பட தயாரான போது ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில் 4 பேர் வந்தார்கள். அவர்கள் கட்டுமஸ்தான உடற்கட்டுடன் உருவத்தில் பெரிதாக இருந்தார்கள்.

நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளோம், வா செல்லலாம் என கூறினார்கள். அப்போது நீங்கள் யார்? என்று கேட்டேன். நீ விளையாடத்தானே செல்கிறாய், நாங்கள் உன்னை அழைத்துச் செல்லவே வந்துள்ளோம் என்றனர்.

அப்போது நான், அழைத்து வருவதற்கெல்லாம் ஏற்பாடு செய்துள்ளார்களே என சிறப்பாக உணர்ந்தேன். பின்னர் புல்லட்டில் ஒருவர் பின்னால் நான் அமர்ந்தேன். எனக்கு பின்னால் மற்றொருவர் ஏறினார். சான்விட்ச் போன்று என்று அழுத்திக் கொண்டு அழைத்துச் சென்றனர்.

ஒரு ஆடம்பரமான தேநீர் கடைக்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள பெஞ்ச்சில் உட்கார வைத்தார்கள். பின்னர் பஜ்ஜி, வடை என அனைத்தையும் வாங்கி கொடுத்தார்கள். அப்போது அவர்கள், பயப்படாதே நாங்கள் உனக்கு உதவி செய்யவே இங்கு இருக்கிறோம் என்றனர்.

பிற்பகல் 3.30 முதல் 4 மணி இருக்கும். அப்போது போட்டி தொடங்கப் போகிறது, செல்லலாம் எனக் கூறினேன். அப்போது அவர்கள் இல்லை, நீ போகக்கூடாது. நாங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள். நீ விளையாட செல்வதை தடுக்கவே நாங்கள் விரும்பினோம். நீ சென்று விளையாடினால் உனது விரல்கள் இருக்காது என்று மட்டும் உறுதியாக கூறுகிறோம் என்றனர். இதன் பின்னர் நான் விளையாட மாட்டேன் என உறுதி கொடுத்த பிறகே என்னை வீட்டில் கொண்டு விட்டார்கள். அப்போது எனக்கு 15 வயது இருக்கும்” என்றார். நாங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள். நீ விளையாட செல்வதை தடுக்கவே நாங்கள் விரும்பினோம். நீ சென்று விளையாடினால் உனது விரல்கள் இருக்காது என்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.