“முதல் 5 மேட்ச் மாணிக்கமா இருந்த சூரியகுமார்.. கடைசி 6 மேட்ச் பாட்ஷாவாக மாற்றம்…” கம்பேக் கொடுப்பதுல நான் கில்லிடா என்று சொல்லும் சூரியகுமார் யாதவ் புள்ளிவிவரங்கள்!

இந்த சீசனின் துவக்கத்தில் மாணிக்கமாக இருந்த சூரியகுமார் யாதவ், கடைசி ஆறு போட்டிகளில் பாட்ஷாவாக மாறியதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. புள்ளி விவரங்களின் அலசலை பின்வருமாறு காண்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகளிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து மோசமாக துவங்கியது. அதன் பிறகு வெற்றி தோல்விகளை மாறிமாறி சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பிரகாசமாக மாற்றியது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று சொதப்பலாக விளையாடியதற்கு காரணம் அணியின் முன்னணி வீரர்களான சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்றோர் சரியாக செயல்படாதது தான். ரோகித் சர்மா இன்னும் ஃபார்மிற்கு வரவில்லை என்றாலும், சூரியகுமார் யாதவ் ஃபார்மிற்கு வந்துவிட்டதால் அவரது அதிரடி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

இதற்கு முன்புவரை மும்பை இந்தியன்ஸ் அணி 200+ ரன்களை ஒருமுறை மட்டுமே சேஸ் செய்திருக்கிறது. ஆனால், இந்த சீசனில் மட்டுமே மூன்றுமுறை 200 மற்றும் 200+ ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக சேஸ் செய்ததுள்ளது. இதற்கு சூரியகுமார் யாதவ் பங்களிப்பு இன்றியமையாது.

புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இந்த சீசனின் முதல் ஐந்து போட்டிகளில் 66 ரன்கள் மட்டுமே அடித்திருந்த சூரியகுமார் யாதவ் மூன்று போட்டிகளில் ஒற்றை இழக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறார். கடைசி 6 போட்டிகளில் நான்கு அரைசதங்கள் உட்பட 310 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கடைசி ஆறு போட்டிகளில் கிட்டத்தட்ட 220+ ஆக இருக்கிறது.

சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த புள்ளி விவரங்களில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவின் ஃபார்ம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓப்பனிங் இறங்கி சொதப்பிவரும் ரோகித் சர்மா, கடைசி ஐந்து போட்டிகளில் 2 டக் அவுட் உட்பட 12 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இப்படி அணியின் கேப்டன் மோசமாக விளையாடிய போதும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை குவிப்பதற்கு மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவின் ஃபார்ம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மோதல்

குஜராத் அணி 11 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் வலுவாக முதல் இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுவிடும்.

அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 12 புள்ளிகளில் உள்ளது. மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை கட்டாயம் வெல்ல வேண்டும். சிக்கலின்றி எளிமையாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று போட்டிகளையும் வெல்லவேண்டும். ஆகையால் இன்றைய போட்டியில் குஜராத் அணியை வீழ்த்துவது முக்கியமாகும். தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு மும்பை இந்தியன்ஸ் தள்ளப்படும்.

பந்துவீச்சில் கலக்கி வரும் குஜராத் அணியை சமாளித்து சூரியகுமார் யாதவ் தனது ஃபார்மை தொடர்வாரா? மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுமா? அல்லது சூரியகுமார் யாதவ் அதிரடியை கட்டுப்படுத்தி, பலமான மும்பையை வீழ்த்தி முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.