வாஷிங்டன் சுந்தர் எப்படிப்பட்ட வீரர் என நான் தொடர்ந்து அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் என்று சுந்தரின் தந்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் பலர் காயத்தில் அவதிப்பட்டு வந்ததால் வெளியில் அமர்த்தப்பட்டனர். போதிய வீரர்கள் இல்லாத சூழலில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் தக்கவைப்பு வீரர்களாக இருந்து பிளேயிங் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பிடித்தனர்.
முக்கியமான டெஸ்ட் போட்டியில் முன்னனுபவம் இல்லாத வீரர்களை களம் இறக்கியதால் எவ்வித எதிர்பார்ப்பும் அவர்கள்மேல் இல்லை. இருப்பினும் இந்திய அணி வெல்வது கடினம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த சூழலில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேநேரம் பேட்டிங்கிலும் இக்கட்டான சூழலில் வந்து விக்கெட்டை இழக்காமல் 62 ரன்கள் அடித்துக் கொடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 22 ரன்கள் அடித்து சிறந்த ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்து காட்டினார்.
இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் சுந்தரின் தந்தை இது குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், “வாஷிங்டன் சுந்தர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 5 வயதிலிருந்து இதற்காக முழுவதுமாக உழைத்து வருகிறார். இவர் 17 வயதிலேயே ஷிகர் தவான், வார்னர் போன்ற வீரர்களுக்கு பந்து வீசி இருக்கிறார். இதுவே அவரது மனநிலையை மிகவும் திடப்படுத்தி இருக்கிறது.
தற்போது அவர் மூன்று வித போட்டிகளிலும் விளையாடி வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் கபில்தேவ் போன்று ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆக வருவார். நான் ஒன்றை மட்டும் அவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். நூற்றாண்டு காணாத சிறந்த வீரராக நீ வரவேண்டும் என்பேன். அதை உணர்ந்து செயல்படுகிறான்.” என்றார்.