ஹர்திக் பாண்டியா நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் தான், அதற்கு இந்த 3 முக்கியமான விஷயங்கள் தான் காரணமென்று பேசியுள்ளார் தீபக் சஹர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து நன்றாக பங்களிப்பை கொடுத்து வருகிறார். நடுவில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் காயம் காரணமாக விளையாட முடியாமலும்இருந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ்-க்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடி கோப்பையையும் பெற்று தந்ததால் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதை நன்றாக பயன்படுத்தி தற்போது டி20 அணிக்கு கேப்டன் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு துணை கேப்டன் ஆகும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். குணமடைந்து, மீண்டும் அணிக்குள் திரும்புவதற்கு நன்றாக பயிற்சியும் செய்து வருகிறார். காயமடைவதற்கு முன்பு நடைபெற்ற சில தொடர்களில் பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பை கொடுத்தார். பேட்டிங்கில் நன்றாக பயிற்சி செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்நிலையில் தீபக் சஹர் தன்னை ஹர்திக் பாண்டியா உடன் ஒப்பிட்டு சில கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். எப்படி ஹர்திக் பாண்டியா நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார்? அவருக்கு இணையாக வருவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பேசினார்.
முதலில் காயத்திலிருந்து குணமடைவது, மீண்டும் பார்மிற்கு திரும்புவது பற்றி பேசிய தீபக் சஹர் கூறுகையில், “என்னுடைய அணுகுமுறை என்பது மிகவும் எளிமையானது, சிறு வயதிலிருந்து ஒரே அணுகுமுறையை இப்போதுவரை பயன்படுத்தி வருகிறேன். 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசி, பந்தை இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்யவேண்டும். அப்படி செய்தால் என்னால் பேட்ஸ்மேனை ஆட்டம் இழக்கச்செய்ய முடியும்.
அதேபோல் பேட்டிங்கில் சிறிய அளவிலாவது பங்களிப்பை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக என்னால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியும் என்று நம்பினேன். ஒருமுறை இந்திய அணிக்கு இடம் கிடைத்துவிட்டால், அதன் பிறகு அங்கு எனக்கு கிடைக்கும் பயிற்சி என்னை உயரத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் என்றும் நம்பிக்கையுடன் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். இந்த நம்பிக்கை எனக்கு உதவியது. தற்போதும் அதே நம்பிக்கையுடன் இருக்கிறேன். மீண்டும் அணிக்குள் இடம் பிடிப்பேன்.” என்றார்.
“ஹர்திக் பாண்டியாவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் ஆரம்ப கட்டத்தில் இந்திய அணிக்குள் வரும்போது அவர் இருந்ததற்கும் தற்போது அவர் செயல்படும் விதத்திற்கும் நிறைய மாறுபாடு இருக்கிறது. பீல்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி மிகச்சிறப்பாக செய்து வருகிறார். பேட்டிங்கில் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு இவருக்கு மாற்று வீரரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அதேபோல நானும் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நெருங்க வேண்டும் அல்லது அவரது இடத்திற்கு வரவேண்டும் என்றால், பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங் அனைத்திலும் முழுமையாக வெளிப்படுத்தி விளையாட வேண்டும். அப்படி எந்த வீரர் செய்தாலும் இந்திய அணிக்குள் இடம் உறுதி.” என்றார்.