நான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இவைதான் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.
சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ், டி20 உலககோப்பை தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து அசத்தி 239 ரன்கள் குவித்தார்.
டி20 உலக கோப்பை முடிந்தும் தனது பார்மை தொடர்ந்து வரும் இவர், நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் சதம் அடித்தார். அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சதம் அடித்தார்.
57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1800 ரன்களுக்கும் அதிகமாக அடித்திருக்கிறார். இதில் 14 அரைசதங்கள், இரண்டு சதங்கள் அடங்கும். ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை அணிக்காகவும் கொல்கத்தா அணிக்காகவும் அபாரமாக இவர் விளையாடி இருக்கிறார்.
எண்ணற்ற சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு மிகவும் நெருக்கமான இரண்டு ஆட்டங்கள் என்றால், எதை கூறுவீர்கள்? என கேட்டதற்கு தனது பதிலை அவர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில்,
“சர்வதேச டி20 அறிமுக போட்டியில் நான் அரைசதம் அடித்தேன். அது எனக்கு இன்றளவும் சிறப்பான ஒன்று.”
“2019 ஆம் ஆண்டு முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் பொழுது, சென்னை மைதானத்தில் 135 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நான் நிதானமாக விளையாடி 70 ரன்கள் அடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தேன்.
இறுதியாக போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்த போட்டியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இவை இரண்டும் தான் எனக்கு தற்போது வரை நெருக்கமாக உள்ளது. மீண்டும் மீண்டும் இப்போட்டிகளை பார்ப்பேன்.” என்றார்.