எல்லா தகுதியும், திறமையும் இருக்கு; இந்த பையனுக்கு வாய்ப்பு கிடச்சே ஆகனும்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !!

உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷி தவானுக்கு விரைவில் இந்திய அணியிலும் இடம் கிடைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேச அணியின் கேப்டன் ரிஷி தவான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மிக சிறப்பாக செயல்படக்கூடிய திறமை படைத்தவர். இவருக்கு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடிய ரிஷி தவான் ஜார்ஜ் பெய்லி விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

மேலும் அந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இவர் அந்த தொடரில் இந்திய அணியில் விளையாடவில்லை.அதற்குப்பின் இந்தியா அணிக்காக ஒரு போட்டியில் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 2021-2022 நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரிஷி தவான் பேட்டிங்கில் 458ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 17 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இப்படி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் அதிரடியாக செயல்படும் இவரை இந்திய அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதே கருத்தை முன்மொழிந்துள்ளார்.

ரிஷி தவான் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “கடந்த 6 வருடத்திற்கு முன் இந்திய அணியில் தேர்வான ரிஷி தவான் தற்பொழுது சிறந்த பார்மில் உள்ளார், இப்படி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் சிறப்பாக செயல்படும் ஒருவர் தான் இந்திய அணிக்கு தற்போது தேவை, இந்திய அணி வெற்றி பெற்ற உலக கோப்பை தொடரில் எல்லாம் சிறந்த ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு இருந்தது, இதை தான் நான் அதிகமாக பேசி வருகிறேன், ஒரு அணியில் சிறந்த ஆல்ரவுண்டர் இருப்பது அந்த அணியின் கேப்டன் மற்றும் தேர்வாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும், மேற்கூறப்பட்ட காரணங்களை எல்லாம் வைத்து சிறந்த பார்மில் இருக்கும் ரிஷி தவானை தற்போது இந்திய அணியின் தேர்ந்தெடுக்க வேண்டும். இவரை இந்திய அணியில் தேர்ந்தெடுத்தால் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் பேட்டிங்கில் களமிறங்களாம், அதேபோன்று பந்துவீச்சில் முதல் மாற்று வீரராக தேர்ந்தெடுக்கலாம்” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

 

Mohamed:

This website uses cookies.