நாங்கள் எங்களை உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 4-3 என்கிற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இத்தொடரின் போது ஜோஸ் பட்லர் உடல்நிலை குறைவு காரணமாக விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னர், உலக கோப்பையை வெல்லும் அணியாக நாங்கள் எங்களை கருதவில்லை என ஜோஸ் பட்லர் பேசியது அதிர்ச்சிக்கு உள்ளாகியது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி அணியினர் மத்தியில் பெருத்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்றும் கூறினார். அதன் பிறகு தனது உடல்நிலை பற்றியும் பேசினார்.
முதலில் உலக கோப்பையை பற்றி பேசிய அவர், “நாங்கள் எங்களை அப்படிப்பட்ட அணியாக கருதவில்லை. ஆனால் எங்களது அணியில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். எதிரணிக்கு அச்சுறுத்தலான ஒரு அணியாக நாங்கள் நிச்சயம் இருப்போம். எங்களின் பேட்டிங் லைன்-அப் எதிரணியை மிரட்டும் அளவிற்கு இருக்கிறது. நாங்கள் அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். ஆகையால் கோப்பையை பற்றிய நினைப்பு தற்போது வரை எங்களுக்கு இல்லை.” என்றார்.
மேலும் தனது உடல்நிலை பற்றி பேசிய அவர், “தற்போது 100 சதவீதம் குணமடைந்து வந்திருக்கிறேன். எனது எனர்ஜி லெவல் நன்றாக இருக்கிறது. என்னை நான் நன்றாக உணர்கிறேன். மீண்டும் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்காக விளையாடுவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இம்முறை கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவதால் கூடுதல் நெருக்கமாக உணர்கிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் பின்பும் ஆலோசித்து நிதானமாக செயல்படுவது என முடிவெடுத்து இருக்கிறோம்.” என்றார்.