“ரூல்ஸ்ல இருக்கு, இந்திய வீராங்கனை செய்தது சரிதான்” – தோல்வியை ஒப்புக்கொள்ளமல் கிண்டல் செய்த இங்கிலாந்து அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தக்க பதிலடி!

ஐசிசி விதிமுறைகளில் அது இருக்கிறது. நாங்கள் செய்தது சரிதான் என்று இந்திய வீராங்கனைக்கு ஆதரவாக பேசி இருக்கிறார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் அணி 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி கைப்பற்றும் முதல் தொடர் இதுவாகும். மூன்றாவது ஒருநாள் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி இப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 3-0 எனவும் வென்றது.

3வது போட்டியில் இந்திய பெண்கள் அணி 169க்கு ஆல்-அவுட்டானது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி, ஒரு கட்டத்தில் படுதோல்வியை நோக்கி சென்றது. 118 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிஸ் மற்றும் சார்லோட் டீன் இருவரும் சிறப்பாக விளையாடிய 35 ரன்கள் சேர்த்தனர்.

போட்டியின் 44வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அப்போது பந்துவீசும் முனையில் இருந்த சார்லட் டீன், பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்னரே கிரீசை விட்டு வெளியில் சென்றதால், ‘மேன்கட்’ முறைப்படி தீப்தி சர்மா ரன் அவுட் செய்தார். களத்தின் நடுவரிடம் இந்த விஷயம் முறையிடப்பட்டது. அதன் பிறகு மூன்றாவது நடுவருக்கு சென்ற முடிவு, அவுட் என்று கொடுக்கப்பட்டது.

80 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்து இறுதிவரை வெற்றிக்கு போராடிய சார்லட் டீன், இந்த முடிவினால் கண்ணீருடன் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றி ‘முறையற்றது’, ‘கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு இழுக்கு’ என்று மீண்டும் ஒருமுறை ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த விமர்சனத்திற்கு போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “நாங்கள் அதைத்தான் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஐசிசி விதிமுறைகளில் இது இருக்கிறது. நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டு விளையாடி இருக்கிறோம். தீப்தி சர்மா செய்தது மிகச்சரியான செயல். அவருக்கு பக்கபலமாக நான் இருப்பேன். நாங்கள் ஒன்றும் இதை புதிதாக செய்யவில்லை. இது போட்டியின் விதிமுறைகளில் ஏற்கனவே இருக்கிறது. பேட்டிங் செய்பவர்கள் விழிப்புணர்வுடன் இல்லாததற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். அன்றைய நாள் முடிவில் வெற்றி என்பது வெற்றிதான். அனைத்தும் விதிமுறைக்கு உட்பட்டுதான் நடந்திருக்கிறது. களத்தின் நடுவர்களும் அதை கண்காணிப்பதற்காக இருக்கிறார்கள்.” என்று பதிலை வெளிப்படுத்தினார்.

Mohamed:

This website uses cookies.