இந்த பொசிஷனில் விளையாடுவது எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது என்று சூரியகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார்.
டி20 போட்டிகளில் சமீபக்காலமாக இன்றியமையாத வீரராக உருவெடுத்துவரும் சூரியக்குமார் யாதவ் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றார். டி20 உலக கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 811 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது சராசரி 37 ஆகும். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 174 ஆகும்.
துவக்க வீரராக நான்கு முறை, மூன்றாவது வீரராக ஏழு முறை, நான்காவது வீரராக பன்னிரண்டு முறை விளையாடி இருக்கிறார். மூன்று முறை ஐந்தாவது இடத்திலும் களமிறங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட பேட்டிங்கில் அனைத்து இடங்களிலும் விளையாடி இருக்கும் இவர் உலககோப்பையில் எந்த பொசிஷனல் விளையாடுவது மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பது குறித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
“நான் எந்த போஷிஷனிலும் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் நான்காவது இடத்தில் களமிறங்குவது எனக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது. சில அணி துவக்கம் மற்றும் இறுதியில் சில ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை மிடில் ஓவர்களில் எந்த அணி நன்றாக கையாளுகிறதோ? அந்த அணிக்குத்தான் அதிக அளவு வெற்றிகள் இருக்கின்றன. எனக்கு 7 முதல் 15 ஓவர்களில் விளையாடுவது பிடித்தமானதாக இருக்கிறது. 8 முதல் 14வது ஓவர்கள் வரை எவ்வளவு ரன்கள் குவிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றியின் அளவும் இருக்கும் என்பதை நான் எனது அனுபவத்தின் மூலம் உணர்கிறேன்.”
“சமீப காலமாக பவர்ப்பிளே ஓவர்களில் குறைந்தது இரண்டு விக்கெட்டுகள் எளிதாக விழுந்து விடுகின்றன. அதன் பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர்களுக்கு இது மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. ஆகையால் அணிக்கு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் விரைவாக ரன்களை குவிப்பதற்கு 7 முதல் 15 ஓவர்களில் நான் விளையாட வருவதற்கு சௌகரியமாக உணர்கிறேன். அதன் பிறகு பினிஷர்கள் மீதமுள்ள ஓவர்களை பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறாக திட்டமிட்டு தான் தொடர்ந்து களமிறங்கி விளையாடி வருகிறோம். உலக கோப்பை தொடரில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களின் திட்டப்படி எங்களது ஆட்டம் இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.