ஆமா.. தப்பு பண்ணிட்டேன்; பல வருடங்கள் கழித்து தவறை ஒப்புக்கொண்டுள்ளார் அம்பயர் ஸ்டீவ் பக்னர்
முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான முறையில் அவுட் கொடுத்ததை பிரபல முன்னாள் அம்பயரான ஸ்டீவ் பக்னர் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2003 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபாவில் நடந்த போட்டியில் ஜேசன் கில்லெஸ்பி பந்தில், பக்னர் சச்சினுக்கு எம்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அது அவுட் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தும் ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல், கடந்த 2005 இல் ஈடன் கார்டனில் நடந்த அப்துல் ரசாக் வீசிய பந்து சச்சினின் பேட்டில் பந்து படாமல் சென்றது. ஆனால் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். இதனால் சச்சினின் தீவிர ரசிகர்கள் பலர் இன்று வரையில் இவர் மீது கடுப்பாக இருந்து வரும் நிலையில் தனது தவறான முடிவுகள் குறித்து பக்னர் தற்பொழுது ஓபனாக பேசியுள்ளார்.
இது குறித்து ஸ்டீவ் பக்னர் கூறியதாவது;
சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு முறை நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்த ஒரு அம்பயரும் தெரிந்தே தவறான முடிவு வழங்க விரும்புவதில்லை. ஆனால் மனிதர்கள் தவறு செய்வது சகஜம்.
ஒரு முறை ஆஸ்திரேலியாவில் பந்து விக்கெட்டுக்கு மேலே சென்றது. இரண்டாவது முறை ஈடன் கார்டனில். பந்து சச்சினின் பேட்டில் படவில்லை. ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது உங்களுக்கு ஒன்றுமே கேட்காது. ஏன் என்றால் 100,000 ரசிகர்கள் கோஷமிடுவார்கள். தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதுமே மனித வாழ்வின் ஒரு பகுதிதான்.
இது அம்பயரின் தன்னம்பிக்கைக்கு பாதகமாக இருக்குமா என சரியாக தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அம்பயரின் திறனை மேம்படுத்தும். தற்போது அம்பயரின் நிலை வெகுவாக மாறிவிட்டது. ஏன் என்றால் ஒருகாலத்தில் பேட்ஸ்மேன் லைனுக்கு வெளியே விளையாடும் போது அவர் அவுட் இல்லை என தெரிவித்து வந்தோம்.
ஆனால் தற்போதைய தொழில்நுட்பம் பந்து விக்கெட்டில் (ஸ்டெம்பில்) படும் என தெரிவிக்கும் போது முடிவை மாற்றி அவுட் வழங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தொழில் நுட்பத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.